Skip to main content

அயலகத் தமிழர் தின விழா; விருதுகளை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Tamil Day Festival P M.K. Stalin who presented the awards 

தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மூன்றாம் ஆண்டாக 'தமிழ் வெல்லும்' என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழா சென்னையில் நடத்தி வருகிறது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று (ஜனவரி 11) மற்றும் இன்று என இரு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவழியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அயல்நாடுகளில் வாழும் 1400க்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்பதற்குப் பதிவுகள் செய்துள்ளனர். இதில், 218 சர்வதேசத் தமிழ்ச் சங்கங்கள் 48 பிற மாநிலத் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் இந்த இரண்டு நாள் நிகழ்விலும் பங்கேற்கிறார்கள்.

அந்த வகையில் அயலகத் தமிழர் தின விழாவின் முதல் நாளான நேற்று, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த விழாவைத் தொடங்கி வைத்தார். அயலகத் தமிழர் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி வரவேற்புரை ஆற்றினார். இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். இரண்டு நாள் நடைபெறும் இந்த விழாவிற்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. மஸ்தான் முன்னிலை வகிக்கிறார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட அயலகத் தமிழர் கண்காட்சி அரங்குகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று (12.01.2024) தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்  ‘எனது கிராமம்’ என்னும் முன்னோடித் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றி வருகிறார். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும் அயலகத் தமிழர்கள் அதற்குரிய நிதியை அளித்து இத்திட்டத்தின் வாயிலாகச் செயல்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா. சண்முகம் அவர்கள் தலைமை விருந்தினராகப் பங்கேற்றுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் கணியன் பூங்குன்றன் பெயரில் வெளிநாடு வாழ் தமிழர்கள் 13 பேருக்கு தங்கப்பதக்கத்துடன் விருதுகளை வழங்கினார். அதே சமயம் விழாவின் முக்கிய நிகழ்வாக 'வேர்களைத் தேடி' திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியா, கனடா, ஃபிஜி, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 57 அயலகத் தமிழ் மாணவர்கள் தாங்கள் பண்பாட்டுச் சுற்றுலா சென்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் சிறப்புக் காணொளியுடன் கூடிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்