பீகார், உத்தராகண்ட், மிசோரம், சிக்கிம், திரிபுரா போன்ற மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவி வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் இரண்டு பன்றிப்பண்ணைகள் மற்றும் கோட்டயம் மாவட்டத்தில் ஒரு பன்றிப்பண்ணை என மூன்று பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
கேரளாவில் பன்றி இறைச்சிகள் உணவு புழக்கம் அதிகம் என்பதால் அம்மாநில அரசு பன்றிக்கறி விற்பனைக்குத் தடை விதித்ததுடன், ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு நோய்கள் மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு அங்குள்ள பன்றிகளைக் கொன்று புதைக்கும் படி உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பல பன்றிகள் உயிரிழந்துள்ளன. இந்தச் சூழலில் கேரளாவில் பரவி வருகிற ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் அண்டை மாநிலமான தமிழகத்திலும் பரவிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழக - கேரள எல்லையான தென்காசி மாவட்டத்தின் புளியரை சோதனைச்சாவடி அருகே மாவட்டக் கலெக்டர் ஆகாஷ் உத்தரவுப்படி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் பொன்னுவேல், உதவி இயக்குனர் மகேஸ்வரி ஆகியோர் அறிவுறுத்தலின்படி கால்நடை மருத்துவர் ஜெயபால் ராஜா தலைமையிலான குழுவினர் முகாமிட்டு தமிழகத்திற்குள் வருகிற கேரள மாநிலத்தின் பன்றிகள் மற்றும் அவற்றின் கழிவுகள், பன்றியின் உணவுகள் மற்றும் கால்நடைகளை ஏற்றி வரும் வாகனங்களை நுழையவிடாமல் தடுத்து திருப்பி அனுப்புகின்றனர்.
மேலும், பறவைக்காய்ச்சலும் அதிகமாகப் பரவுவதால் வாத்து, கோழி முட்டை, கோழிகள் போன்ற இனங்களை ஏற்றி வரும் வாகனங்களும் கேரளாவுக்குள் திருப்பி அனுப்பப்படுகின்றன. மற்ற வாகனங்கள் தீவிரமாகச் சோதனையிடப்பட்டு கிருமிநாசினி மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்ட பின்பே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. தமிழக - கேரள எல்லையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியில் 5 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கால்நடை மருத்துவர் ஜெயபால் ராஜா தெரிவிக்கையில், "கிருமிநாசினி தெளித்த பிறகே தமிழகப் பகுதிக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. தமிழகத்தில் அதிகமான மக்கள் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை. எனவே பன்றி பண்ணைகளும் இங்கு குறைவு" என்றார்.