Skip to main content

"ஸ்விகி நிறுவன ஊழியர்களின் ஊதியக்குறைப்பு பிரச்சனையில் முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்" -மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Published on 21/08/2020 | Edited on 21/08/2020
mks

 

 

"ஸ்விக்கி நிறுவன ஊழியர்களின் ஊதியக்குறைப்பு பிரச்சனைக்கு, முதலமைச்சர் பழனிசாமி நேரடியாக தலையிட்டு, நிறுவனத்தை நேரில் அழைத்து பேசி தாமதமின்றி தீர்வு காணவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னைச் சந்தித்த "ஸ்விகி" உணவு விநியோக ஊழியர்கள், "கரோனா பேரிடர் காலத்தைக் காரணம் காட்டி ஊழியர்களின் ஊதியத்தையும், ஊக்கத்தொகையையும் குறைத்திருப்பதாகவும் - அதற்காகவே தொடர் போராட்டம் நடத்தியதாகவும்" கூறியபோது- அவர்களின் மன உளைச்சல் கண்டு மிகவும் வேதனைப்பட்டேன். ஊரடங்கு நேரத்திலும்  ‘ஆன்லைன் ஆர்டர்’  மூலம் உணவை எடுத்து சென்று வழங்கி- வீட்டிற்குள் அடைபட்டிருக்கும்  மக்களின் வயிற்று பசியாற்றிய இந்த ஊழியர்களின் போராட்டத்தை 'ஸ்விகி' நிறுவனம் அமைதியாக வேடிக்கை பார்த்ததும் - 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் போராட்டத்தை அ.தி.மு.க. அரசு கண்டு கொள்ளாமல் இருந்ததும், மிகுந்த கண்டனத்திற்குரியது.

 

பேரிடரில் அனைவரின் வாழ்க்கை தரமும், வாழ்வாதாரமும் சூறையாடப்பட்டுள்ள சோகத்தை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறேன்; அதைத்தடுக்க அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி வருகிறேன். ஆனால் கண் முன்னே நடைபெற்ற ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர்களின் போராட்டத்தை கண்டு கொள்ளாமலும் - அவர்கள் வைத்துள்ள “புதிய ஊதிய முறையைத் திரும்ப பெற வேண்டும்” என்பது உள்ளிட்ட 16 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு உரிய பேச்சுவார்த்தையை நடத்திட வேண்டும் என்று கூட அ.தி.மு.க. அரசின் முதலமைச்சரோ அல்லது தொழிலாளர் நலத்துறை அமைச்சரோ முயற்சி செய்யாமலும் இருந்தது மிகமிக தவறான அணுகுமுறை; தொழிலாளர் விரோத மனப்பான்மை. ஒவ்வொரு தொழிலாளரின் உரிமையையும் பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பு- அதிலும் குறிப்பாகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் பொறுப்பு என்பதைக் காலம் தாழ்த்தாமல் உணர்ந்திருக்க வேண்டும்.

 

“மாதம் 20 ஆயிரம் ரூபாய் பெறும் ஒரு ஸ்விகி உணவு விநியோக ஊழியர் 6 ஆயிரம் ரூபாய் கூடப் பெறமுடியவில்லை” என்று ஊழியர்கள் தெரிவித்த செய்திகள் அதிர்ச்சியளிப்பவையாக இருக்கின்றன. கரோனா காலத்திலும் தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள - அவர்களை நம்பியிருக்கும் குடும்பங்களைக் காப்பாற்ற, உயிரைப் பணயம் வைத்து இந்த உணவு விநியோக ஊழியர்கள் பணியாற்றியுள்ளார்கள். அந்த பணிக்குரிய சம்பளத்தை வழங்க 'ஸ்விகி' நிறுவனம் மறுப்பதும், குறைத்ததும் அப்பட்டமான அநீதியாகும். “வேலை செய்த நாட்களுக்கு உரிய சம்பளத்தை வழங்க வேண்டும்” என்பது உரிமை என்றாலும்- “வேலையே செய்யவில்லை என்றாலும் கரோனா காலகட்டத்தில் பணிபுரிவோருக்குச் சம்பளம் வழங்குங்கள்” என்று இதே மத்திய- மாநில அரசுகள் முதலில் உத்தரவிட்டதை மனதில் கொள்ளத் தவறி விட்டார்கள்.  மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அரசே கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக அனைவரும் உணவகத்திலிருந்து ‘ஆன்லைன் ஆர்டர்’  மூலம் பெற்று சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் ஞாயிற்றுக்கிழமை என்பது முழு ஊரடங்கில் சிக்கிக்கொண்டிருக்கிறது. சமூக இடைவெளி கடைப்பிடிப்பதால் மற்ற நாட்களிலும் உணவகங்களில் வாடிக்கையாளர்களை  அதிகமாக அமர வைக்க முடியாத நிலை தொடருகிறது. இது போன்ற நேரத்தில் இந்த போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருந்தது, ஏற்கனவே தொழிலில் முடங்கி போய்க்கிடக்கும் உணவகங்களைப் பாதித்துள்ளது; போராடிய ஊழியர்களின் குடும்பங்களை வறுமையின் பிடியில் தள்ளித்  தவிக்க விட்டுள்ளது.

 

ஆகவே, ஸ்விகி உணவு விநியோக ஊழியர்களின் போராட்டத்தை இதுவரை அலட்சியம் செய்ததுபோல் மேலும் தொடர்ந்து செய்யாமல் - அவர்கள்  போராட்டத்தை கைவிட்டுள்ள நிலையில், ஊழியர்களை உடனடியாக அழைத்துப்பேசி, ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று 'ஸ்விகி' நிறுவனத்திற்கு உத்தரவிடுமாறும், அவ்வாறு அந்த நிறுவனம் கேட்கவில்லையென்றால் முதலமைச்சரே நேரடியாகத் தலையிட்டு - ஊழியர்களையும், நிறுவனத்தையும் அழைத்துப்பேசி - ஊழியர்களின் ஊதிய பிரச்சனைக்கு ஒரு சுமூக தீர்வு காண வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோடை வெப்பம்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin's instructions for summer heat

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்க்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன். வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது. உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது துணி, துண்டு, தொப்பி குடிநீர் எடுத்துச் அணிந்து செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான. தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச்செல்லவேண்டும். மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சனை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள். திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்