அண்மையில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் அக்.10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' என்ற படத்திலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்நிலையில் சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சனை காரணமாக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் தற்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் திட்டமிட்டப்பட்ட மருத்துவ பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரத்த நாளத்தில் அடைப்பு இருக்கிறதா என்பது குறித்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பரிசோதனைக்கு பின்னர் இன்றே அவர் டிஸ்சார்ஜ் ஆக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
திட்டமிட்டப்பட்ட மருத்துவ பரிசோதனை என்பதால் எந்தவித பாதிப்புகளும் இல்லை, இருப்பினும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இது குறித்து விவரங்கள் அறிக்கையாக வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. ரஜினிகாந்தின் உடல்நிலை நலமாக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அப்போலோ மருத்துவமனை தரப்பிலிருந்து தமிழக சுகாதாரத்துறைக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில் ரஜினிகாந்தின் உடல்நிலை நலமாகவும், சீராகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை எனவும், திட்டமிட்டபடி மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கிறது. பெரிய அளவிலான அறுவை சிகிச்சை செய்தும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ரஜினி காந்த் பூரண குணமடைய வேண்டி அரசியல் தலைவர்கள் முதல் நடிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்துவருவாக தெரிவித்துள்ளனர். அந்த வகையில் துணை முதல்வர் உதயநிதி, “உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் சார் பூரண குணம் பெற்று விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.