Skip to main content

இரண்டு நாட்களாக மாற்றுத்திறனாளிகள் தாலுக்கா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்..!

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

People with disabilities have been waiting at the taluka office for two days ..!

 

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 82 மாற்றுத் திறனாளிகளுக்கு சென்ற 2018ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி சித்தோடு அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையத்தில் இலவச வீட்டு மனை நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், ஒதுக்கப்பட்ட அந்த இடம் பாறை, கரடு முரடாக இருப்பதால் சமன் செய்து தரக்கோரி கடந்த நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகள் நல்லகவுண்டன்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 


அப்போது அரசு அதிகாரிகள், அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பிறகு இடத்தை சமன் செய்து தருவதாக அதிகாரிகள் கூறினர். ஆனால், ஒரு நாள் மட்டுமே   இயந்திரங்கள் உதவியுடன் பணிகள் நடந்தது. அதன் பிறகு எந்த பணிகளும் நடக்கவில்லை என அம்மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில், நிலத்தை அளவீடு செய்து, சமன் செய்து தரக் கோரி 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தினருடன் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் 11ஆம் தேதி திங்கள்கிழமை காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார்கள். 12ஆம் தேதியான இன்றும்  இந்தப் போராட்டம் தொடர்ந்தது. நேற்று இரவில் தாசில்தார் பரிமளாதேவி, அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். 

 


மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட 2.1 ஏக்கர் நிலம் முழுவதும் பாறைகளாக உள்ளது. இதனை சமன் செய்ய ரூ.15 லட்சம் வரை செலவாகும். ஏதாவது ஸ்பான்சர் பிடித்து சமன் செய்து தருகிறோம்.  எங்களுக்கு அவகாசம் கொடுங்கள் என்று கூறினார். ஆனால் மாற்று திறனாளிகளோ நீங்கள் பணிகளை தொடங்கி முடிக்கும் வரை நாங்கள் இங்கேயே இருக்கிறோம் என்று கூறிவிட்டனர்.

 


இதையடுத்து  மாற்றுத்திறனாளிகள் நேற்று இரவு முழுவதும் கடும் குளிரில், கொசுக்கடியில் விடிய விடிய போராட்ட களத்தில் இருந்தனர். பெண்கள் குழந்தைகள் மட்டும் இரவு வீட்டிற்கு சென்றுவிட்டனர். ஆண்கள், மாற்றுத்திறனாளிகள் அங்கேயே படுத்து தூங்கிவிட்டனர். இந்நிலையில் இன்று 2-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்து வருகிறது. போராட்டக் களத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டனர். ஈரோடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காத்திருப்பு போராட்டத்தால் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்