
குமரி மாவட்டத்தில் திருட்டு, அடிதடி செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், பாலியியல் தொல்லைகள், அரிசி, கனிம வளங்கள் கடத்தல், கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை என நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதில் ரவுடிகள் மற்றும் கஞ்சா ஆசாமிகளால் காட்டும் அட்டுழியங்களால் பொது மக்கள் தினம் தினம் அச்சத்தில் உள்ளனர்.
அதேபோல் சிறுமிகள் மீது தொடா்ந்து தொடுக்கப்படும் பாலியல் கொடுமைகளால் பெற்றோர்கள் மத்தியிலும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கரோனா காலத்தில் அதிகரித்து இருக்கும் இந்த சம்பவம் கடந்த இரண்டு மாதத்துக்கு முன் புதிய காவல் கண்காணிப்பாளராக வந்த பத்ரி நாராயணனுக்கு சவாலாக இருந்தது. இந்த நிலையில் ஒரே மாதத்தில் அதிரடி காட்டிய காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், 20 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தார். 590 குற்றவாளிகள் மீது நன்னடத்தை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதேபோல் கடும் அச்சுறுத்தலாக இருந்த கஞ்சா கோஷ்டியை சேர்ந்த 71 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 71 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கனிம வள கொள்ளையில் ஈடுபட்ட 38 பேர் கைது செய்யப்பட்டு 67 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருட்டு, கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட 28 பேர் கைது செய்யப்பட்டு ரூ.16 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன.
இந்த நிலையில் இதுகுறித்து இன்று (20-ம் தேதி) செய்தியாளர்களை சந்தித்த பத்ரி நாராயணன், “குமரி மாவட்டத்தில் பெருகி வந்த குற்றச்செயல் சம்பவங்கள் ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டே குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவர்களை கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. மேலும் பொது மக்கள் தங்களுடைய பிரச்சனைகள் மற்றும் நேரில் காணும் குற்றச்சம்பவங்கள் தொடர்பாக எனது கவனத்துக்கு கொண்டு வரும் விதமாக 7010363173 என்ற வாட்ஸ்அப் உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் குறுஞ்செய்தியாகவோ புகைப்படம் மூலமாகவோ சம்பவங்களை தெரிவிக்கலாம் என்றார்.