ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் நகை பறிப்பு மற்றும் கொலை சம்பவம் நடந்து வந்தது இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் ஹெல்மெட் அணிந்து வந்த கொள்ளையர்கள் தாலிக்கொடிகளை பறித்து கைவரிசை காட்டி வந்தனர். இதனால் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பரிண்டன்ட் சக்திகணேசன் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார்.
இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். கொள்ளை சம்பவங்கள் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஈரோடு மரப்பாலத்தைச் சேர்ந்த ஆனந்த், லோகேஸ்வரன், சூரம்பட்டியை சேர்ந்த இளையராஜா, ரவி ஆகிய 4 கொள்ளையர்களை பிடித்தனர்.
இவர்களிடம் இருந்து 34 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பரிண்டன்ட் சக்திகணேசன் கூறும்போது, "ஈரோடு மாநகர் பகுதியில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இதற்காக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் நான்கு பேர் பிடிபட்டனர் அவர்களிடம் இருந்து 34 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், நான்கு கொள்ளையர்கள் சிக்கியுள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பழைய குற்றவாளிகள் பற்றிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் முழுவதும் திருட்டு, கொள்ளை மற்றும் குற்றச் செயல்கள் இல்லாமல் அமைதி நிலவ தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.