சேலத்தில் ஆண்டுதோறும் மாசி அமாவாசையையொட்டி நடைபெறும் மயானக்கொள்ளை விழா, பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காளியம்மன், அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோயில்களில் இருந்து ஊர்வலமாக மயானங்களுக்கு வரும் பக்தர்கள், அங்கு தங்கள் முன்னோர்கள் சமாதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவர்.
இதையொட்டி அம்மனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் மயானக் கொள்ளையன்று, அம்மன் போலவே வேடமணிந்து, அருள் வந்த நிலையில் ஆடியபடியே வீதி ஊர்வலமாகச் செல்கின்றனர். அப்போது மற்ற பக்தர்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்தும் ஆடு, கோழிகளை கடித்து ரத்தத்தைக் குடித்தபடி ஊர்வலமாக வருவர்.
மயானக்கொள்ளை நிகழ்ச்சி, இரண்டு நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. அம்மன் வேடமிடும் பக்தர்கள், மாசி அமாவாசைக்கு முதல் நாளன்று, குறக்கூடை எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அதாவது, இத்தனை நாளாக விரதம் இருந்த பக்தர்கள் அன்றுடன் வீடு வீடாகச் சென்று யாசகம் பெற்று விரதத்தை முடித்துக் கொள்கின்றனர். கிச்சிப்பாளையம், நாராயண நகர், செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பம்பை மேளத்துடன் கடவுள் வேடமணிந்து புறப்பட்ட பக்தர்கள், வீதி வீதியாகச் சென்று யாசகம் பெற்றனர். பின்னர் அவர்கள் தேர்மண்டி பகுதியில் உள்ள அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
இரண்டாம் நாளான இன்று (பிப். 23) பல்வேறு பகுதிகளில் இருந்து அங்காளம்மன் வேடமணிந்த பக்தர்கள், காக்காயன் சுடுகாட்டிற்கு ஊர்வலமாக வந்தனர். ஆடு, கோழிகளை கடித்து அதன் பச்சை ரத்தத்தைக் குடித்தபடி, காக்காயன் சுடுகாட்டிற்கு வந்தனர். விழாவின் மற்றொரு சிறப்பு அம்சமாக, குழந்தை பாக்கியம் இல்லாத இளம்பெண்கள் தரையில் படுத்திருக்க, அவர்களை அம்மன் வேடமிட்ட பக்தர்கள் தாண்டிச் சென்றால், அடுத்த ஆண்டுக்குள் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. அதனால் வழிநெடுக ஏராளமான பெண்கள் தரையில் படுத்து, அம்மனிடம் ஆசி பெற்றனர்.
இதேபோல் அம்மனிடம் ஆசி பெற்றால் திருமணத்தடை நீங்கும், குடும்பத்தில் நீண்ட நாள்களாக நிலவி வந்த பிரச்னைகள் நீங்கும், பேய்கள் விட்டு அகலும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. அதுபோன்ற பிரச்னைகள் உள்ளவர்களும் அம்மனிடம் ஆசி பெற்றனர். மயானக் கொள்ளை விழாவையொட்டி, காக்காயன் சுடுகாட்டில் தங்கள் முன்னோர்களின் சமாதிகளை சுத்தப்படுத்தினர். அவர்களின் நினைவாக சமாதி முன்பு, இறந்தவர்களுக்கு பிடித்தமான உணவு, பலகாரங்கள், பழங்களை வைத்து படைத்து வழிபாடு நடத்தினர். சேலம்வாழ் மக்கள் இந்த விழாவை வெகுவாக பார்த்து ரசித்தனர்.
இது இப்படி இருக்க, வள்ளாள மகாராஜன் என்பவரின் மனைவியின் குடலை கிழித்து கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு, மயானத்தை சூறையாடுவதால்தான் இந்நிகழ்ச்சிக்கு மயானக்கொள்ளை என்ற பெயர் வந்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.