Skip to main content

சூலூர் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை விமானங்களின் கண்காட்சி

Published on 10/08/2017 | Edited on 10/08/2017

 
சூலூர் விமானப்படை தளத்தில்
 இந்திய விமானப்படை விமானங்களின் கண்காட்சி 

கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் நடைபெற்ற இந்திய விமானப்படை விமானங்களின் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

கோவையை அடுத்த சூலூரில் இந்திய விமானப்படையின் தளம் அமைந்துள்ளது. விமானங்களின் பழுது நீக்கம் மற்றும் விமானிகளுக்கான பயிற்சிகள் இத்தளத்தில் வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக இந்த தளத்திற்குள் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் வருடத்திற்கு ஒருமுறை சுதந்திர தினத்தை முன்னிட்டு விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இவ்வாண்டிற்கான கண்காட்சி இன்று ஒருநாள் நடைபெற்றது. இதில் இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும் விமானங்கள்,ரேடார் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், விமானப்படை வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் ஆகியவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

 இதனை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். இதன் ஒரு பகுதியாக இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும் துருவ் ஹெலிகாப்டரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. சூலூர் விமானப்படையின் சாரங் பிரிவை சேர்ந்த இந்த ஹெலிகாப்டர் வானில் வட்டமடித்தத்தோடு குட்டிக்கரணம் அடித்து சாகசங்கள் நிகழ்த்திய காட்சி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

இதையடுத்து ஆண்டனோவ் வகையை சேர்ந்த பயணிகள் மற்றும் சரக்கு விமானம் மேலும் வட்டமடித்ததை கண்ட பார்வையாளர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர். பொதுவாக இந்திய விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போர்க்காலங்களில் மட்டுமல்லாது இயற்கை பேரிடர்களின் போது பல்வேறு மீட்பு பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தது மாணவ மாணவிகளிடையே வரவேற்பை பெற்றது. 

கண்காட்சியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டார்னியர், ஆண்டனோவ், எம்.கே-1 வகை விமானங்கள் மற்றும் துருவ், எம்.ஐ 17ரக ஹெலிகாப்டர்கள் போர்க்காலங்களில் மட்டுமல்லாது அமைதி காலங்களில் பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுவது குறிப்பிடதக்கது. கண்காட்சியை பார்வையிட்ட மாணவ மாணவிகள் முதல்முறையாக இந்திய விமானப்படை போர்விமானங்களை பார்வையிட்டது மகிழ்ச்சியளிப்பதாகவும் விமானப்படையில் இணைய வேண்டும் என்ற தங்களது ஆர்வத்தை இக்கண்காட்சி அதிகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

- அருள்

சார்ந்த செய்திகள்