கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நேற்று ஆற்று திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழாவிற்காக திருக்கோவிலூர் மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து விழாவில் கலந்து கொண்டனர். இதன் காரணமாக பாதுகாப்பு பணிக்காக திருக்கோவிலூர் மட்டுமல்லாது பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கனரக வாகனங்கள் ஊருக்குள் வருவதை தவிர்க்கும் பொருட்டு வடக்கு நெமிலி கூட்ரோடு பகுதியில் வாகனங்களை மாற்றுப்பாதைக்கு மாற்றி விடும் பணியில் பகண்டைக் கூட்டுச்சாலை காவல் நிலையத்தை சேர்ந்த முதல் நிலை காவலர் சுரேஷ் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவ்வழியாக கர்நாடகா பதிவெண் கொண்ட கார் ஒன்று அதிவேகமாக வந்து அவர் மீது மோதுவது போல் நிற்காமல் நகருக்குள் சென்றது. இதில் அதிர்ச்சியான போலிஸார் அந்த காரை விரட்டி வந்தனர். அந்த கார் போக்கு காட்டியபடி நிற்காமல் வேகமாக சென்றது, போலிஸ் இருசக்கர வாகனமும் விடாமல் விரட்டியது. காரை பின் தொடர்ந்து விரட்டி வந்த போலிஸார், சைலம் பகுதியில் காரை மடக்கி பிடித்து காரில் இருந்த மூவரிடம் வாகனத்தை மாற்று பாதையில் சொல்ல அறிவுறுத்திய போது நிற்காமல் மோதுவது போல் வந்ததை ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மது போதையில் இருந்த வடக்கு நெமிலி பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 23), சுபாஷ்(வயது 28) சொரையப்பட்டுப் பகுதியை சேர்ந்த பிரவீன் காந்த் (வயது 27) ஆகிய மூன்று இளைஞர்களும், காரில் இருந்து கீழே இறங்கி தலைமை காவலர் சுரேஷை கடுமையாக தாக்கி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தடுக்க வந்த பொதுமக்களையும் மிரட்டியுள்ளனர். இது இது தொடர்பாக உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு காவலர் தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கூடுதல் போலீசார் அந்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர். அப்போதும் அந்த இளைஞர்கள் அடங்காமல் காவல்துறையினரிடம் கெத்து காட்டி மது போதையில் தகராறு செய்துள்ளனர். அவர்களை அப்படியே காருடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்ற போது அவர்கள் தப்பி ஓட பார்த்துள்ளனர். ஆனால் விடாத போலீசார் அவர்களை விரட்டி மீண்டும் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தாக்கப்பட்ட காவலரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவலர் சுரேஷ் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருக்கோவிலூர் போலீசார் காவலரை அவதூறாக பேசியது, பணி செய்ய விடாமல் தடுத்தது, அரசு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட நான்கு பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதுகாப்பு பணிக்காக வந்த முதல்நிலை காவலரை மது போதையில் இளைஞர்கள் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.