போலி வாகன பதிவெண்ணை பயன்படுத்தி பாஸ்டேக் மூலம் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள சார்வாய் புதூர் வடக்குக் காடு பகுதியைச் சேர்ந்தவர் இனியன். இவருடைய கார் பதிவு எண்ணை போலியாக பயன்படுத்தி, பல்வேறு சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அவர், தலைவாசல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம் அரும்பாக்கத்தைச் சேர்ந்த பாலகணேஷ் (37), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (35) ஆகியோர் இனியனின் கார் எண்ணை போலியாக பயன்படுத்தி பொன்னம்பலம்பட்டி உள்ளிட்ட 9 சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டணம் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.