தமிழர் நீதிக் கட்சி எனும் கட்சியின் தலைவர் சுப. இளவரசன். இவரது கார் மீது ஒரு கும்பல் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்த முயற்சி நடந்துள்ளது.
இவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேல குடியிருப்பு பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர், நேற்று தனது கட்சியினர் நடத்திய திருமணம் மற்றும் புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரியலூர் மாவட்டப் பகுதிகளுக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு, காரில் ஜெயங்கொண்டம் நோக்கி உடையார்பாளையம் வழியாக வந்து கொண்டிருந்தார்.
அப்படி வரும் வழியில் துளாரங்குறிச்சி என்ற ஊர் அருகே அவரது கார் வந்தபோது திடீரென்று 15க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் சுப. இளவரசன் கார் மீது துப்பாக்கியால் சுட்டு வெடிகுண்டும் வீசியுள்ளது. கார் நிற்காமல் வேகமாக வந்ததால் எவ்வித பாதிப்பும் இன்றி சுப இளவரசன் உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்து அவர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் திட்டமிட்ட ஒரு கும்பல் தன்னை கொலை செய்யும் முயற்சியாக என் கார் மீது துப்பாக்கியால் சுட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். காரை நிறுத்தாமல் வேகமாக வந்ததால் நான் உயிர் தப்பினேன். எனவே காவல்துறை, என்னை வழிமறித்துத் தாக்குதல் நடத்த முயன்ற சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆயுத தடை மற்றும் வெடிகுண்டு தடுப்பு சட்டத்தின் கீழ் மற்றும் சதித்திட்டம் தீட்டி என்னை கொலை செய்ய முயற்சி செய்தது சம்பந்தமான சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமது புகாரில் சுப இளவரசன் தெரிவித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான், கூடுதல் எஸ்.பி. திருமேனி, ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கதிரவன் ஆகியோர் சுப. இளவரசனிடம் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். சுப. இளவரசன் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.