சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் கோட்ட பொறியாளர் அசோகன் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் செந்தில்வேலன், மண்டல ஸ்தபதி, கோயில்கள் ஆய்வாளர் உள்ளிட்டவர்கள் அடங்கிய கோயில் உழவாரப் பணிகள் குறித்த நிலையான ஆய்வுக் குழுவினர் கோயிலில் பல்வேறு இடங்களில் கோயில் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது. சுத்தமாக உள்ளதா? என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இவர்கள் தெற்கு கோபுர வாயில், மேல கோபுர வாயில், கோயில் உட்பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். இது குறித்து இணை ஆணையர் பரணிதரன், கோயில்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வு செய்ததாகவும் இது குறித்த தகவலையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதனைத் தொடர்ந்து கோவில்களில் வெளி பிரகாரங்களில் கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதையும், தெற்கு வீதி, கீழ வீதி கோபுரம் அருகில் மாட்டு தொழுவம் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு மாட்டு சாணிகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்காமல் அவதிப்படுவதாக உழவார பணிகள் ஆய்வுக் குழுவினரிடம் தெரிவித்தனர். இந்த கருத்தை ஏற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறினார்கள்.
முன்னதாக ஆய்வுக் குழுவினர் கோயிலுக்கு உள்ளே வரும்போது இது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இந்து அறநிலையத்துறைக்கும் கோயிலுக்கும் சம்பந்தம் இல்லை. இங்கு உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்வது கண்டிக்கத்தக்கது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம். இது உள்நோக்கம் கொண்டது என கோயில் தீட்சிதர்களின் செயலாளர் ஆய்வு குழுவினரிடம் கடிதம் அளித்துள்ளார். கோயிலில் உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்தது கோயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.