சென்னை அம்பத்தூரில் தனியார் கல்லூரி மாணவர்கள், நபர் ஒருவர் மீது தாக்குதலில் ஈடுபட்ட பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு கருக்கு பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்படுகிறது. இக்கல்லூரியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் அக்கல்லூரியில் பயின்று வரும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வாசலில் நின்றுகொண்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் மக்களிடம் போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர் குழந்தையைப் பள்ளியில் விட்டுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சாலையில் நின்று கொண்டிருந்த மாணவர்களை ஓரமாக நிற்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றாகச் சேர்ந்து அசோக்கை தாக்கினர்.
ஏற்கனவே ஆஞ்சியோ சிகிச்சைபெற்று இருந்த அசோக்கை போலீசார் முன்னிலையில் மாணவர்கள் தாக்கும் அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளான அசோக் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பந்தமாக சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, முதற்கட்டமாக 7 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.