Skip to main content

"தேர்தலை நிறுத்த நீதிமன்றத்தை நாடவில்லை" - முக ஸ்டாலின் விளக்கம்!

Published on 06/12/2019 | Edited on 06/12/2019


திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலையொட்டி வழங்கியுள்ளது. ஜனநாயகத்தை காக்கும் வகையில் அந்தத் தீர்ப்பு அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

 

 MKStaline



திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தை நாடவில்லை. தொகுதி வரையறை சரியாக இல்லை, இடஒதுக்கீடு முறையிலும் முறையான நிலை இல்லை என்பதற்காகத்தான் நீதிமன்றத்தை நாடினோம். இது இன்று நேற்றல்ல; 2016ம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகம் அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அப்போதே நாங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். அதற்கான தீர்ப்பும் உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.

உச்சநீதிமன்றத்தை பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்து வைத்த கோரிக்கையை, அந்த நியாயத்தை தெளிவாகப் புரிந்துகொண்டு பல்வேறு கேள்விகளை, தமிழக அரசையும், மாநில தேர்தல் ஆணையத்தையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டுள்ளனர். அதில் முக்கியமான கேள்வி என்னவென்றால், புதிதாக மாவட்டங்களைப் பிரித்துள்ளீர்களே - அதற்கு தொகுதி வரையறை முறையாக செய்யப்பட்டுள்ளதா?, தேர்தல் அறிவித்த பிறகு, தேர்தல் நடத்தும் சூழ்நிலையில் புதிய மாவட்டங்களைப் பிரிக்க வேண்டிய அவசியம் என்ன?, ஆகவே குறுக்கு வழியில், சட்டப்படி அல்லாமல் இந்த தேர்தலை நடத்த வேண்டும் என இப்படிப்பட்ட காரியத்தைச் செய்துள்ளீர்களா? என்று வெளிப்பைடையாக உச்சநீதிமன்றம் தமிழக அரசிடமும், தேர்தல் ஆணையத்திடமும் கேட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்துங்கள் என்று சொன்னால், தேர்தலை நிறுத்துவதற்காகத்தான் தி.மு.க. நீதிமன்றத்தை நாடுகிறது என்று, திட்டமிட்டு தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அரசியல்வாதிகள் இந்த செயலைச் செய்தால் கூட, அரசியலுக்காக செய்கிறார்கள் என்று கருதலாம். ஊடகத்துறையில் உள்ள சிலரும் தி.மு.க.,தான் தேர்தலை நிறுத்த நீதிமன்றத்திற்கு செல்கிறது என தவறான பிரச்சாரம் தொடர்ந்து செய்கின்றனர்.

இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பார்த்த பிறகாவது இனி ஊடகங்கள் உண்மையை எடுத்து சொல்ல வேண்டும். தொடக்கம் முதல் தி.மு.க. எடுத்து வைக்கும் கோரிக்கை என்னவென்றால், புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது 9 மாவட்டங்கள். அதில், பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர்கள் எப்படி எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தொடர்ந்து இந்த பிரச்சனையை சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதுதான் நேற்று உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, மாநில தேர்தல் ஆணையமே அதை ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதுதான் உண்மை. இன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகத் தெளிவாக வந்திருப்பது தி.மு.கழகத்தின் கோரிக்கைக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றியாகும்" என்றார். 
 

சார்ந்த செய்திகள்