திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட அண்ணாமலை சேரி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 18 ஆசிரியர்கள் பணி புரிய வேண்டிய இந்தப் பள்ளியில் கடந்த காலங்களில் ஏழு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர்களின் ஆறு பேர் பணியிடை மாற்றம் காரணமாக வேறு பள்ளிக்குச் சென்று விட்டதால் தற்போது, எஞ்சியிருந்த ஒரு ஆசிரியரும் விடுப்பில் சென்று விட்டதால் அனைத்து வகுப்புகளும் முடங்கி விட்டன. இதனால் கல்வி கற்க முடியாமல் மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில், போதிய ஆசிரியர்களை நியமிக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர் முதல் ஆட்சியர் வரை மாணவர்கள் சார்பாகவும், கிராம மக்கள் சார்பாகவும் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து மாணவர்களின் பெற்றோர்களும் மாணவர்களுடன் இணைந்து அவ்வழியாக வந்த மூன்று அரசு பேருந்துகளைச் சிறை பிடித்து அனைத்து வகுப்புகளும் தடையின்றி நடைபெற போதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரியும், கோரிக்கை மனு அளித்தும் கிராமப்புற மாணவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கும் வகையில் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த காவல் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரிடம் போதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை ஏற்றுப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இதே நிலை தொடர்ந்தால் காலவரையற்ற பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.