சிதம்பரம் புறவழிச் சாலை பொய்யாபிள்ளைசாவடி பேருந்து நிறுத்தம் நான்கு முனை சந்திப்பில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
சிதம்பரம் அருகே புறவழிச் சாலை பகுதியில் அமைந்துள்ள பொய்யாபிள்ளைசாவடி நான்கு முனை சந்திப்பு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், அந்தப் பகுதியில் சாலையைக் கடக்கும் போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது என்றும் தற்போது விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச் சாலைக்காக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பொய்யாபிள்ளைசாவடி நான்கு முனை சந்திப்பில் சுரங்கப்பாதை அமைத்து தரவேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை காலை பள்ளி மாணவ மாணவிகள் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலை நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய அதிகாரிகளுடன் இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பெயரில் அனைவரும் கலைந்து சென்றனர்.