தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் சென்னை வானகரத்தில் நேற்று (24.11.2024) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விழாவின் சிறப்பு மலரை வெளியிட்டார். அதனை எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயன் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடிகர் ரஜினி காந்த், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திடைப்பிரபலங்கள் எனப் பலரும் காணொளி வாயிலாக வாழ்த்துரை வழங்கினர்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக ஏ.ஐ. என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதில் எம்.ஜி.ஆர். பேசுகையில், “பேரன்பு கொண்ட பெரியோர்களே தாய்மார்களே, என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் நல்லா இருக்கீங்களா?. சாப்டீங்களா?. ரொம்ப நல்லது. நான் எப்போதும் உங்களுடன் தான் இருக்கிறேன். உங்கள் இதயத்தில் தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். எனது மனைவி ஜானகி மாபெரும் இயக்கமான அதிமுகவிற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. எனது மனைவியின் நூற்றாண்டு விழாவில் என் ரத்தத்தின் ரத்தங்களான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜானிகிக்காக விழா எடுத்தது, அதுவும் மாபெரும் விழா எடுத்தது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.
முக்கியமாக என்னுடைய அன்புத்தம்பி எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய நேர்மையான பொது வாழ்வாலும், உழைப்பாலும், விசுவாசத்தாலும் இன்றைக்குக் கட்சியின் பொதுச் செயலாளராகச் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை பார்ப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.தைரியத்தோடும், வீரத்தோடும் பொன்மனச் செல்வி ஜெயலலிதா சிறப்பாகச் செயல்பட்டார். அதேபோல் தம்பி பழனிசாமி நீங்களும் சிறப்பாகச் செயல்படுகின்றீர்கள். கட்சிக்கு விசுவாசமான தொண்டர் படை எப்போதும் உங்களுடன் இருக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
நான் துவங்கிய இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு தேர்தல் வந்தாலும் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு வெற்றியை பெற்றுத்தருவீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். அனைவருக்கும் என்னுடைய எனது ஆசிகள். நாளை நமதே இந்த நாடும் நமதே வாழ்க அண்ணா நாமம். நன்றி வணக்கம்” என பேசினார். இதனையடுத்து விழாவில் இருந்த தொண்டர்கள் ஒன்ஸ்மோர், ஒன்ஸ்மோர் எனக் கேட்டனர். அதனைத்தொடர்ந்து இந்த காணொளி மீண்டும் ஒரு முறை ஒளிபரப்பப்பட்டது.