தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. எனவே இன்று (25.11.2024) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதே போன்று கடலூர், விழுப்புரம், அரியலூர்,சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள், புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள்ளாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.