உலக மரபுவார விழா நவம்பர் 19ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி, பொதுமக்களிடையே தொன்மையான சின்னங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் பிரச்சாரம் செய்தனர். இந்த பிரச்சாரத்தின் போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருக்கின்றன. குறிப்பாக நெடுங்கல் எனப்படும் மென்கீர், கல்வட்டங்கள், கல், பதுக்கைகள், இரும்பு கால சின்னங்கள், சங்க கால கோட்டைகள், குடைவரைகள், முற்கால பிற்கால கற்றளிகள், கட்டுமான கோவில்கள், இன்னும் பிற நினைவுச் சின்னங்கள் என அனைத்து வகையான தொல்லியல் சான்றுகளும் நிரம்ப கிடைக்கும் ஒரு பகுதியாக இருக்கிறது.
எனவே இந்த சின்னங்களை வருங்கால சந்ததிக்கு ஒப்படைக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும். இந்திய அரசியல் சாசனப்படி அடிப்படைக் கடமைகளில் ஒன்றாக பண்பாடு, தொன்மையான பொருட்களை பாதுகாப்பது வரையறுக்கப்பட்டுள்ளது. அபரிமிதமாக கிடைக்கும் இத்தகைய தொன்மை சின்னங்களை உள்ளூர் இளைஞர்களும் பொதுமக்களும் அழியாத பாதுகாப்பதற்கு உறுதுணை புரிய வேண்டும், இரும்பு காலத்தைச் சேர்ந்த தாழிகள் கல்வட்டங்கள் உள்ளிட்டவற்றை தனிப்பட்ட பயன்பாட்டுக்காக சிலர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது போன்ற சூழலில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வேறு யாரேனும் இத்தகைய தொன்மை வாய்ந்த சின்னங்களுக்கு இடையூறு செய்யும் பட்சத்தில், அவற்றை பாதுகாக்கும் விதத்தில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய்த்துறையினருக்கோ, அரசு அருங்காட்சியகத்திற்கோ அல்லது இந்திய தொல்லியல் துறையைச் சார்ந்தவர்களுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்.
உள்ளூர் அளவில் இத்தகைய சின்னம் நமது ஊரின் பெருமை என்பதை உணர்ந்து போற்றி பாதுகாக்க வேண்டும் இதை அனைவரும் தவறாது பின்பற்ற வேண்டும் என்று இந்த பிரச்சாரத்தின் போது கேட்டுக் கொள்ளப்பட்டது. பிரச்சாரத்தை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டனர். உடன் புதுக்கோட்டை வரலாற்று ஆய்வு மையத்தின் செயலர் மாரிமுத்து, தொல்லியல் ஆய்வு கழக உறுப்பினர் செல்வநாதன், பீர்முகமது, சாகுல் ஹமீது மற்றும் மாந்தான்குடி, பெருங்களூர் பகுதி மக்கள் பங்கேற்றனர்.