
2023 - 2024 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் கடந்த 20ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 21ம் தேதி தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று யுகாதி என்பதால் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், நேற்று பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் தொடங்கி நடைபெற்றது.
இன்று காலை 10 மணிக்கு வினாக்கள்-விடைகள் விவாதம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பினார்கள். இதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் உரிய பதில்களை அளித்தார்கள். இந்நிகழ்வு முடிந்த பின் நேரமில்லா நேரம் நிகழ்வு துவங்கியது. அப்போது எதிர்க்கட்சியினர் தங்களது பிரச்சனைகள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளைக் குறித்து கேள்வி எழுப்பினார்கள். நேரமில்லா நேரம் முடிந்த பின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கும். கட்சி சார்ந்த பிரதிநிதிகள் மானியக்கோரிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிப்பார்கள். இத்துடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று முடிவடையும்.
இந்நிலையில் இன்று நடந்த வினாக்கள்-விடைகள் நிகழ்வில் பொதுத்தேர்வில் 50000 மாணவர்கள் தேர்வு எழுதாதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “2020 - 2021 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு தேர்விற்கு பதிவு செய்த அத்தனை பேரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்கள். அன்று இதன் மூலம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தான் இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களாக உள்ளனர். 2021-2022 கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பில் தேர்விற்கு பதிவு செய்த மாணவர்களில் 8 லட்சத்து 85 ஆயிரத்து 51 மாணவர்களில் 41 ஆயிரத்து 366 மாணவர்கள் வருகை புரியவில்லை. 83 ஆயிரத்து 811 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாதவர்களும் வருகை புரியாதவர்களும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 177 மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத் தேர்விற்கு வருகை தராத 47 ஆயிரத்து 947 மாணவர்களில் 40 ஆயிரத்து 509 மாணவர்கள் முந்தைய ஆண்டு 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு வருகை புரியாத தேர்ச்சி பெறாத மாணவர்கள்.
நீண்டகாலம் வருகை புரியாத மாணவர்களையும் இடைநிற்றல் மாணவர்களையும் பள்ளிக்கல்வி முறையில் இருந்து வெளியேறாமல் இருந்திட அனைத்து மாணவர்களுக்கும் பதிவுப்பட்டியலில் இடம் கொடுக்க வேண்டும் எனக் கருதப்பட்டது. மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வருகைப் பதிவேட்டில் எவ்வித வரைமுறைகளையும் கடைப்பிடிக்காமல் வாய்ப்பு அளிக்கப்பட்டது. வரும் கல்வி ஆண்டு முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் பொதுத்தேர்விற்கான பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொழுது குறைந்தபட்ச வருகை பதிவு 75% சதவீதம் பின்பற்ற வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வரும் கல்வியாண்டில் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ளவர்களாக கருதி அவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் மாணவர்களின் விவரப்பட்டியல் எமிஸ் தளத்தில் கண்காணிக்கப்படும் தலைமை ஆசிரியர் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வார். 2 வாரத்தில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் வட்டார மைய ஆசிரியர் பயிற்றுநர் எமிஸ் தளத்தில் அம்மாணவர்களின் விவரங்கள் காண்பிக்கப்படும். ஆசிரியர் பயிற்றுநர் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வர். 3 வாரத்தில் 9 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் மாவட்ட ஒருங்கிணைப்பாளரின் எமிஸ் தளத்தில் மாணவரின் விவரப்பட்டியல் காண்பிக்கப்படும். 4 வாரங்களுக்கும் மேல் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் இடைநிற்றல் வாய்ப்புள்ளதாக அம்மாணவர்களை கருதி பொதுத்தேர்வு தளப்பட்டியலில் அம்மாணவர்களை சேர்ப்பர். இடைநின்ற மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சில ஆலோசனைகள் வழங்கப்படும்” என்றார்.