பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் நீதி கேட்டு பேரணி நடத்தியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவன சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் சொசைட்டி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் இந்திய பிரதமர் அறிவித்த ‘ரோஸ்கர் மேளா’ திட்டத்தின் கீழ் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தரப்படுத்தும் வரை அனைவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் வழங்க வேண்டும், என்.எல்.சி நிறுவனத்திற்கு ஏற்கனவே வீடு, நிலம் கொடுத்து ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வேலைக்கு தகுந்தாற்போல் பணி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நெய்வேலி பெரியார் சதுக்கத்திலிருந்து நீதி கேட்டு பேரணியாக புறப்பட்டு என்.எல்.சி தலைமை அலுவலகம் வரை சென்றனர்.
பின்னர் என்.எல்.சி தலைமை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கச் சென்ற போது அலுவலகத்தில் மனுக்களை பெற்றுக்கொள்ள உயர் அதிகாரிகள் யாரும் இல்லாத காரணத்தால் மனு அளிக்காமல் திரும்பினர். இது குறித்து தொழிலாளர்கள் தெரிவிக்கையில், "ஒப்பந்தத் தொழிலாளர்களை என்.எல்.சி நிறுவனம் மதிக்கவில்லை. இதனால் அடுத்த மாதத்தில் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும்” எனத் தெரிவித்தனர்.