திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் பா.ஜ.க சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டார்.
அதன்பின் பத்திரிகையாளர்களிடம் அவர் பேசும்போது, "நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வேளாண் திட்டத்தை, பிரதமர் மோடி நிறைவேற்றி உள்ளார். சுதந்திர இந்தியாவில், தொடர்ந்து விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட ஒரு கோரிக்கைதான், தற்போது வேளாண் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவில் விளைவிக்கப்படும் எந்தப் பொருளும் நாடு கடந்து நேரடியாக விற்பனையாகலாம் என்ற அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், எந்த விவசாயிகளும் பாதிக்கப்படப் போவதில்லை. இதனால் பாதிக்கப்படப்போவது இடைத்தரகர்கள் மற்றும் கமிஷன் மண்டி வைத்திருப்பவர்கள் மட்டுமே.
இதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான விஷயம் என்னவென்றால் தி.மு.க ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கொண்டுவந்த 'உழவர் சந்தை' திட்டத்தின் விரிவாக்கம் தான் தற்போது பிரதமர் நரேந்திர மோடியால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் திட்டம். இதை ஏன் தி.மு.க தலைவர் ஸ்டாலின் எதிர்க்கிறார் என்று தெரியவில்லை. தி.மு.க.வினரிடம் வாசிப்புத்திறன், புரிந்து கொள்ளும் திறன் குறைந்து வருகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
விவசாயிகளிடம் அரசு கொள்முதல் செய்வதை நிறுத்தப் போவதில்லை என பிரதமர் தெளிவாக தெரிவித்துள்ளார். இடைத்தரகர் இல்லாமல் நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதால், லாபம் அதிகரிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில், திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் பா.ஜ.க போட்டியிடும். அதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது" என்று கூறினார். இந்த நிகழ்ச்சியின்போது, பா.ஜ.க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.