திருமுருகன் காந்தி கைது செய்யபட்டதை கண்டித்து தொடர் மாலை அணிவிக்கும் போராட்டத்தை துவக்கிய பெரியார் தொண்டர்கள்.
"தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தியை பெங்களூரில் தமிழக காவல் துறையினர் கைது செய்தனர்.
விடுதலை புலிகள் மீதான தடையை நீக்ககோரி ஜெர்மனியில் உரையாற்றிய திருமுருகன் காந்தி, ஐ.நா.வில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் 8 வழிச்சாலை விவகாரங்கள் குறித்து பேசியதாக அவர் மீது தேசதுரோக வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர் எந்த விமான நிலையம் வந்தாலும் கைது செய்யும்படி லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக திருமுருகன் காந்தியை கைது செய்த போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு சிறையில் இருந்து வெளிவந்த திருமுருகன் காந்தி ராயபேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தார் என போலீசார் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் புதிதாக 124a தேசதுரோக வழக்கினையும் 153 சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட புதிய வழக்குகள் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
மேலும் புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு திருமுருகன் காந்தி வழக்கறிஞருக்கு தெரியாமல் மாற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததால் கைது என்பதை கண்டித்து பெரியார் தொண்டர்கள் காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பு உள்ள சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும் தொடர்ந்து மாலை அணிவிக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
Published on 11/08/2018 | Edited on 11/08/2018