திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் ஏரிக்கு, செங்கம் ஏரியில் இருந்து வரும் உபரி தண்ணீர் வருவதற்கான காய்வாய் இருந்தது. தற்போது அந்த கால்வாய் இல்லை, பலவித ஆக்கிரமிப்புகளால் கால்வாய் இல்லாததால் கரியமங்கலம் ஏரிக்கு வரவேண்டிய தண்ணீர் வருவதில்லை.
இதுப்பற்றி விவசாய குறை தீர்வு கூட்டத்தில் செங்கம் தாசில்தாரிடம் பலமுறை முறையிட்டுள்ளார்கள் கரியமங்கலம் விவசாயிகள், அதேபோல் ஏரியை பராமரிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளார்கள். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் ஆட்சியர் கந்தசாமியிடமும் முறையிட்டுள்ளார்கள், நடவடிக்கை என்பது எடுக்கவேயில்லை.
தற்போது மழைக்காலம் தொடங்கி மழை பெய்து வருகிறது. செங்கம் ஏரியில் இருந்து வரவேண்டிய தண்ணீர் கரியமங்கலம் ஏரிக்கு வரவேயில்லையாம். தற்போதும், நீர் வரத்து கால்வாயை சரிசெய்ய வேண்டும் என மக்கள் முறையிட்டுள்ளார்கள். இப்போதும் அதிகாரிகள் அசைந்துக்கொடுக்கவில்லை.
அதிகாரிகளின் செயலை கண்டித்து நவம்பர் 4ந்தேதி, கரியமங்கலம் கிராம விவசாயிகள், ஏரியில் குடியேறி உணவு சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை அறிந்து அதிர்ச்சியான பொதுப்பணித்துறை அதிகாரிகள், செங்கம் பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் ராஜாராம்மையை விவசாயிகளிடம் பேச அனுப்பினர். அவர் வந்து போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் உங்களின் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றி தருகிறேன். ஆக்ரமிப்புகளை அகற்றி கால்வாயை சரிசெய்து விரைவில் தருகிறோம் எனச்சொல்லி உத்தரவாதம் தந்ததன் அடிப்படையில் காலை முதல் மதியம் வரை நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.