புதுக்கோட்டை நகரத்தில் பிரதான போக்குவரத்து நிலவும் பகுதிகளில் ஒன்றாக பழனியப்பா முக்கம் உள்ளது. இந்தப்பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், வட்டார வளமையம், எல்.ஐ.சி அலுவலகம், நகர்மன்றம் உள்ளிட்டவை உள்ளன. பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் நடமாடும் பகுதியாக உள்ள இப்பகுதியில் தற்பொழுது அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதனால் இந்தப் பகுதியல் செல்லும் அனைவருக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன.
![tasmak](http://image.nakkheeran.in/cdn/farfuture/a9mvor_RQFuS1JFDZfDOqmbw9FIYfjOlUQSGRY0wWSU/1537468050/sites/default/files/inline-images/2_56.jpg)
மேற்படி டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மேற்படி டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் செப்.20 அன்று பூட்டுப்போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டு துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமையன்று நடைபெற்ற பூட்டுப் போடும் போராட்டத்திற்கு மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.சலோமி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் காஞ்சனா, சுபா~pனி மற்றும் கௌரி, ஸ்டெல்லாமேரி, வசந்தி, சின்னம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போடுவதற்கு போலீசார் அனுமதிக்காததால் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![tasmak](http://image.nakkheeran.in/cdn/farfuture/h9gQiFMU6m-wADpDPAzpdT-p6UMmzcwAlTbFr2K7quY/1537468076/sites/default/files/inline-images/1_71.jpg)
இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர் பரணி, காவல் ஆய்வாளர்கள், வாசுதேவன், கருணாகரன் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் இரண்டு வார காலத்திற்குள் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.