சேலத்தில் பரப்புரையின்போது, பழம் விற்கும் பெண்ணிடம் அதிமுகவுக்கு வாக்களிக்கும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக 500 ரூபாய் நோட்டை கையில் திணித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநகர பகுதிகளில் இன்று (ஏப்ரல் 16) வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
காலையில் வ.உ.சி. மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரித்த அவர், அங்குள்ள வாழைப்பழம் விற்கும் பெண்ணிடம் அதிமுக வேட்பாளரின் படம் அச்சிட்ட துண்டு அறிக்கையை கொடுத்து வாக்கு கேட்டார். அந்தப்பெண்ணிடம், பழ வியாபாரம் எல்லாம் எப்படி நடக்கிறது? ப-ழங்களை எந்தெந்த ஊர்களில் இருந்து வாங்கி சந்தைக்குக் கொண்டு வருகிறீர்கள்? என்றெல்லாம் சிரித்தபடியே கேட்டார்.
திடீரென்று அந்தப்பெண்ணிண் கைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 500 ரூபாய் நோட்டை திணித்தார். அதிமுகவுக்கு கண்டிப்பாக ஓட்டுப்போட வேண்டும் என்று கேட்டபடியே அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
அதேபோல், ஒரு தேநீர் கடையில் நுழைந்து வாக்கு சேகரித்தார். அப்போது அந்த கடையில் தேநீர் அருந்திய முதல்வர் எடப்பாடி, தேநீர் போடும் தொழிலாளியிடம், தினமும் எத்தனை ரூபாய் கூலி கொடுக்கிறார்கள்? இதை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடிகிறதா? மனைவி, குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? என்றெல்லாம் விசாரித்தார். பின்னர் அதிமுகவுக்கு வாக்களிக்கும்படி கூறிய அவர், தான் குடித்த தேநீருக்கு 100 ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார். அந்த தொகைக்கு அவர் சில்லரை பெற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில், வாழைப்பழம் விற்கும் பெண்ணிடம் 500 ரூபாய் நோட்டை முதல்வரே நேரடியாக திணித்த காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் பரவியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, ''முதல்வர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது வாழைப்பழம் விற்கும் பெண், முதல்வருக்கு ஒரு சீப்பு பச்சை வாழைப்பழத்தை எடுத்து அன்பளிப்பாக கொடுத்தார். அதை சும்மா பெறக்கூடாது என்பதற்காக அந்த பழத்திற்குதான் முதல்வர் 500 ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார். அதை வாக்குக்காக கொடுத்த பணம் என்று கதை கட்டிவிட்டார்கள். தேர்தல் ஆணையத்தின் வீடியோகிராபர்களும் அந்தக் காட்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்படி இருக்கும்போது முதல்வர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவாரா?,'' என்றனர்.