குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் இல்ல திருமணம் விழாவுக்காக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று நாகர்கோவில் வந்தார். அவர் வேப்பமூடு சந்திப்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு குமரி மாவட்டத்தில் பல்கலைகழகம் அமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் ஒரு கோடி கையெழுத்து வாங்கும் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, இலங்கையில் கூட்டாட்சி முறை இல்லாததால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுகிறார்கள். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க எவ்வளவு பணம் செலவழித்தார்கள் என்று பாஜகாவுக்கு தெரியும். இதனை அமலாக்கத்துறை, சிபிஐ கண்டுக்கொள்ளவில்லை.
இந்திய பொருளாதாரத்தில் சுனாமி அழிவு ஏற்பட்டுள்ளது. பணம் மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால், பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதை மோடி அரசு ஒத்துக்கொள்ளாமல் இருப்பது அதிசயம். பொருளாதாரத்தை மீட்க முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறிய கருத்துகளை ஏற்க மத்திய அரசு மறுத்துள்ளது. தவறான பொருளாதார கொள்கை இந்திய பொருளாதாரத்தை வீழ்த்தி விடும். இதனை மறைத்து மக்களை திசை திருப்பவே காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு போடுகிறது பாஜக.
அரசியலில் வழக்குகளும் சிறைவாசமும் வரும் காரணத்தால் பணிந்து விழும் ஜாதி அல்ல காங்கிரஸ் கட்சி. முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது, அவர் பெயர் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே சிதம்பரம் மீது வழக்குகள் போடப்படுகிறது. ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே ரேசன் உள்ளிட்டவைகள் மாநில சுயாட்சியை பாதிக்கும். வடகிழக்கு மாநிலங்களில் இருந்து 20 லட்சம் பேர் தமிழகத்தில் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கான ரேசன் பொருட்களை மத்திய அரசு வழங்குமா? அல்லது மாநில அரசு வழங்குமா?
தமிழகத்தில் இரண்டு முறை முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அது தொடர்பான வெள்ளை அறிக்கை தேவை. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குரல் மென்மையாக உள்ளதா என ஆராய்வது அமைச்சர் ஜெயக்குமாரின் வேலையா? அதிமுகவினர் மீது தான் எல்லா வழக்குகளும் உள்ளது. ஆனால் ஸ்டாலின் மீது ஒரு வழக்கு கூட இல்லை. அப்படி இருக்கையில் அவர் கைது பயத்தில் உள்ளார் என்று ஜெயக்குமார் உளறுகிறார் என்றார்.