Skip to main content

பொதுப் பாதையில் முளைப்பாரி எடுத்துச் செல்ல எதிர்ப்பு; ஊர்வலத்துக்கு பாதுகாப்பளித்த காவல்துறை!    

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

 

struggle against carrying mulaipari  temple on public road Aruppukottai

 

காலம் மாறிவிட்டதென்று சொல்வதெல்லாம் வெறும் பேச்சளவில் மட்டுமே என்று கூறும் அளவுக்கு சில கிராமங்களில் அவ்வப்போது சம்பவங்கள்  நடந்து விடுகின்றன. விருதுநகர் மாவட்டம் – அருப்புக்கோட்டை அருகிலுள்ள ஆத்திப்பட்டி கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் வணங்கி வரும் காளியம்மன் கோவில் உள்ளது. வருடம்தோறும் பங்குனிப் பொங்கல் விழாவில் முளைப்பாரி எடுத்து நீர்நிலையில் கரைப்பது, அச்சமுதாயத்தினரின் வழக்கமாக இருந்து வருகிறது. அவர்கள் முளைப்பாரி எடுத்துச் செல்லும் பாதை சேதமடைந்துவிட்டதால், பக்கத்திலுள்ள மற்றொரு பொதுப் பாதை வழியாக முளைப்பாரி ஊர்வலம் செல்ல காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அதிகாரிகளும்  அனுமதியளித்தனர்.   

 

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமுதாயத்தினர் அந்த  சமுதாயத்தினரின் முளைப்பாரி ஊர்வலம் பொதுப் பாதை வழியாகப் போகக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் வருவாய்த்துறையினரும் காவல்துறையினரும் எதிர்ப்பு தெரிவித்த சமுதாய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளின் வேண்டுகோளை அந்த சமுதாயத்தினர் ஏற்காததால் போலீசார் குவிக்கப்பட்டனர். அதனால், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரோ அச்சமுதாயத்தினரை அப்புறப்படுத்தி அந்தப் பகுதியில் கயிறு கட்டி, இரு பக்கமும் பலத்த பாதுகாப்புடன் முளைப்பாரி ஊர்வலம் செல்வதற்கு ஏற்பாடு செய்தனர். அதன்பிறகு அங்குள்ள நீர்நிலையில் முளைப்பாரிகள்  கரைக்கப்பட்டன.

 

 

சார்ந்த செய்திகள்