பள்ளி மாணவன் ஒருவன் திரைப்படத்தை பார்த்துவிட்டு காவல் நிலையத்திலேயே வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்த சம்பவம் வாழப்பாடியில் நிகழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று அவசர அழைப்பு எண்ணான 100க்கு தகவல் ஒன்று கொடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் வாழப்பாடி காவல் நிலையத்தில் முழுமையாகச் சோதனையிட்டனர். ஆனால் அந்த தகவல் முற்றிலும் போலியானது என்பது சோதனைக்குப் பின் தெரிய வந்தது.
வெடிகுண்டு இருப்பதாக தகவலளித்தது சிறுவன் என்பதால் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பேளூரை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் அவசர அழைப்பு எண்ணான 100-ஐ தொடர்பு கொண்டு காவல் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகத் தெரிவித்தது தெரிய வந்தது. அந்த சிறுவனை வாழப்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவனிடம் விசாரணை நடத்தியதில் சில நாட்களுக்கு முன்பு பீஸ்ட் படம் பார்த்ததாகவும் அதில் மாலில் வெடிகுண்டு வைப்பது போன்ற காட்சி இருப்பதை பார்த்து அதேபோல் பயத்தை உருவாக்க காவல் நிலையத்திலேயே வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்ததாகக் கூறியுள்ளான். பின்னர் அந்த சிறுவனை எச்சரித்த போலீசார் இனி இப்படி நடந்து கொள்ளக் கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.