மேட்டூர் அணை இந்த ஆண்டு இரண்டாவது முறையாக முமு கொள்ளளவான 120 அடியை எட்டியது இந்த நிலையில் அணைக்கு கர்நாடகாவிலிருந்து வரும் நீரின் வரத்து 30 ஆயிரம் கன அடியாக உள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்காக 27 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. கர்நாடகா பகுதிகளில் மழையின் அளவு கூடுதலாகிக் கொண்டே வருகிறது. ஏற்கனவே கர்நாடகா அணைகளான ஹேரங்கி, கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகள் முழுமையாக நிரம்பி உபரி நீர் தான் வெளியேறி வருகிறது.
அந்த உபரி நீரே இன்றைய நிலவரப்படி 30 ஆயிரம் கன அடியாக இருக்கிறது. மழை அளவு கூடி வருவதால் நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் உபரி நீர் ஐம்பதாயிரம் முதல் 1 லட்சம் வரை வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இதனால் வருகிற மொத்த நீரையும் அப்படியே வெளியேற்ற வேண்டிய நிலை மேட்டூர் அணைக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் முன்கூட்டியே வெளியேறும் நீரின் அளவை கூடுதலாக்க முடிவு செய்து இன்று இரவு முதல் மேட்டூர் அணையிலிருந்து 60 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
இதனால் காவேரி ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கும் பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்க கூட இறங்க கூடாது என ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதேபோல் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை என டெல்டா பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தற்போது வெளியேரும் 60 ஆயிரம் கன அடி மேலும் அதிகரித்து 1 லட்சம் கன அடி வரை கூட வாய்ப்புள்ளது. இந்த மொத்த நீரில் 70 சதவீதம் எதற்கும் பயனற்ற வகையில் வீனாக கடலில் கலக்கவுள்ளது.