நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து, கேரளா, கர்நாடகா போன்ற 89 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மூன்றாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அதே சமயம் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயரை வெளியிடாமல் தொடர்ந்து மெளனம் காத்து வந்தது. இதற்கிடையில் அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இத்தகைய சூழலில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தியும், ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியும் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதே சமயம் அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளுக்கும் இன்று (03.05.2024) மாலையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளது. மே 20 ஆம் தேதி இந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையொட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலியிலும், கே.எல். சர்மா அமேதியிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி போட்டியிடுகிறார். மேலும் கே.எல். சர்மா அமேதியிலும் போட்டியிட உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராகுல் காந்தி ரேபரேலியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த மக்களவைத் தேர்தலில் ஏற்கெனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை எனவும் கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்ற சோனியா காந்தி தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பபை ஏற்படுத்தியுள்ள ரேபரேலி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராகுல் காங்தி 2 வது முறையாக 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளார். அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.