நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மட்டும் வெற்றிபெறுவார் என்றும், தமிழக பாஜக தலைமையில் மாற்றம் வரவேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த முறை கிடைத்த 300 தொகுதிகளில் இந்த முறை 25 சீட்டுகள் குறைவாகவே கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். யார் பிரதமர் எனக் கட்சிக்குள் தேர்தல் நடத்தப்படவில்லை. வேட்பாளர்கள் வெற்றிபெற்று வந்த பிறகு பிரதமர் யார் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். பிரதமராக மோடிக்கு இரண்டு முறை வாய்ப்புக் கிடைத்து விட்டது. இந்த முறை வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
பாஜக எம்பிக்கள் என்னைப் பிரதமராக பொறுப்பேற்க சொன்னால் ஏற்பேன். மோடி என்ன சொல்கிறார் என்பதை பார்க்க கூடாது. தேர்தல் அறிக்கையைத்தான் பார்க்க வேண்டும். நாட்டில் சரியான எதிர்க்கட்சித் தலைவர் கிடையாது; எதிர்க் கட்சித் தலைவராக வரக்கூடிய தகுதி மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு உள்ளது.
தமிழ்நாட்டில் நெல்லை தொகுதியில் போட்டியிடும் நைனா நாகேந்திரன் மட்டுமே வெற்றி பெறலாம். மற்ற வேட்பாளர்களைப் பற்றி தெரியாது. தமிழ்நாட்டில் ஒரு சீட்டுக்கு மேல் கிடைக்குமா என்பதை சொல்ல முடியாது. தமிழ்நாடு பாஜக தலைமையில் மாற்றம் வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.