தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 302 மையங்களில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.80 லட்சம் பேர் தேர்வெழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் அடங்குவர்.
மேலும் பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் சுமார் 47 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. அதோடு மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இத்தகைய சூழலில் இந்த பொதுத் தேர்வை எழுதிய அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எனப் பலரும் முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி வரும் 6 ஆம் தேதி (06.05.2024) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தேர்வு முடிவு வெளியாகும் நேரம், தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வதற்கான இணையதள முகவரிகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.