
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஈரோட்டில் 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில், ஈரோடு கருங்கல்பாளையம் காந்திசிலை அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு, ஈரோடு எஸ்.டி.பி.ஐ செயலாளர் ஜமால்தீன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் முகமது லுக்மானுல் ஹக்கீம் கண்டன உரையாற்றினார்.
போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் பர்ஹான் அஹமது, குறிஞ்சி பாஷா, தொழிற்சங்க மாவட்டத் தலைவர் ஆட்டோ அப்துல் ரகுமான், வர்த்தகர் அணி மாவட்டத் தலைவர் பஜ்லுல் ரகுமான், சமூக ஊடகப் பொறுப்பாளர் அபூபக்கர் சித்தீக், விமன் இந்தியா மூமென்ட் செயலாளர் சபீனா உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளிலும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.