இந்தியாவில் சிறுவர் உரிமைகளுக்காகவும், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு முறையை நடை முறைப்படுத்துவதற்காகவும் தொடர்ந்து போராடிவரும் கைலாஷ் சத்தியர்த்தி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராவார். இவரது அமைப்பு, நாடு முழுவதும், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பிற தன்னார்வ அமைப்புக்களுடன் சேர்ந்து, பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறது.
தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீட்ஸ் நிறுவனமானது, மாநில செயலகமாக இருந்து, தமிழகத்தில் ‘வன்புணர்ச்சி இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என்கிற நாடு தழுவிய இயக்கத்தினை செயல்படுத்தி வருகிறது. கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அமைப்போடு இணைந்து, வன்புணர்ச்சியைத் தடுக்கவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே ‘வன்புணர்ச்சி இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என்கிற உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 69 வேட்பாளர்கள் இந்த உறுதிமொழிப்பத்திரத்தில் கையெழுத்திட்டனர். அவர்களில் 5 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த 28-ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில், மக்களின் உறுதியேற்பு நிகழ்வு நடந்திருக்கிறது. 500 கிராம சபைகளில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி மற்றும் திருவண்ணாமலையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், ‘வன்புணர்ச்சி இல்லாத இந்தியா’ அமைப்பின் தமிழக அமைப்பாளர் ராஜகோபால் “தமிழகத்தில் நமது பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பாலியல் ரீதியான வன்முறை நடைபெறாமல் தடுக்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். வன்புணர்ச்சி இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.” என்று கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தங்கள் கைகளை உயர்த்தி மக்கள் அதனைத் தீர்மானமாக நிறைவேற்றினார்கள்.
குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சாரம் (தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி) மாநில அமைப்பாளரும், வன்புணர்ச்சி இல்லாத இந்தியா அமைப்பின் தமிழக அமைப்பாளருமான பா.ராஜகோபால் “பெண்களையும் குழந்தைகளையும் இரு கண்களாகப் பேற்றும் நம் தேசத்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் வளரியம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் அதிகரித்திருக்கிறது. தற்போது, கூட்டு பாலியல் வன்முறைகள், அதை வைத்து மிரட்டிப் பணம் பறிக்கும் நிகழ்வுகளும் நடந்த வண்ணம் உள்ளன.
இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்கு தமிழக அரசு போக்ஸோ சட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தின்படி முன்பு மிகக்குறைவான அளவிலேயே வழக்குகள் பதிவானது. இப்போது, போக்ஸோ சட்டத்தில் மிக அதிக அளவில் வழ்க்குகள் பதிவாகி வருகின்றன. ஆனாலும், குற்றவாளிகள் மீதான குற்றம் உறுதிசெய்யப்படாத நிலையில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பதில்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது.” என்றார் வேதனையுடன்.