மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று புயலாக வலுப்பெற்றது. இதற்கு ஈரான் பரிந்துரை செய்துள்ள ஹமூன் என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. ஹமூன் என்று பெயரிடப்பட்ட இந்த புயல், இன்று(24ம் தேதி) அதிகாலை தீவிர புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தப் புயலின் காரணமாகத் தமிழ்நாட்டில், சென்னை, கடலூர், நாகை, பாம்பன், புதுச்சேரி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல், தேனி, மதுரை, விருதுநகர், குமரி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இந்தப் புயலின் காரணமாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஹமூன் புயல் தற்போது ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து, 230 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும், அடுத்த சில மணி நேரங்களில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் வலுவிழந்து வடகிழக்கு நோக்கி நகரும் என்றும் வங்கதேசத்தில் நாளை மாலை கேப்புப்பாரா மற்றும் சிட்டகாங் பகுதியில் புயலாக கரையைக் கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.