Skip to main content

மெல்ல தலைகாட்டுகிறது ஸ்டெர்லைட் பூதம்..!மீண்டும் சூடு பிடிக்கிறது மக்களின் எதிர்ப்பு போராட்டம்..!

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

 


நாசகார ஸ்டெர்லைட் ஆலையில் கிடைக்கும் நலத்திட்ட உதவிகளை தடுத்து நிறுத்தக்கோரி, தூத்துக்குடியில் மீண்டும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  கடந்த ஆண்டு துவக்கத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, சுற்றுவட்டார கிராம மக்கள் போராட்டத்தை துவக்கினார்கள். ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத அரசாங்கம், போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களுக்கு பல்வேறு வகையில் நெருக்கடி கொடுத்தது. அதிலும் திமிறி எழுந்த மக்கள், சென்ற ஆண்டு மே.22-ந்தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தினார்கள்.

 

st

 

அப்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் 15 பேர் உயிரிழந்தனர். நடந்த சம்பவத்தை டி.வி.யில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது எனக்கு தெரியாது என்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பின்னர் ஒருவழியாக மே.28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. ஆலையை திறப்பதற்கு வேதாந்தா குழுமம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மக்களின் ஒரு பிரிவினரை தூண்டிவிட்டு, ஆலை எங்களுக்கு வேண்டும் என ஆட்சியார்களிடம் மனு கொடுக்க வைத்தது.


   இப்போது அடுத்த கட்டமாக சுற்றுச் சூழல் நிதியின்கீழ், மரக்கன்று நடுதல், குடிநீர் குழாய் அமைத்து கொடுத்தல், நிழற்குடை அமைத்து தருதல், திருநங்கைகளுக்கு உதவித்தொகை வழங்குவதால், பெண்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளித்தல் போன்ற செயல் திட்டங்களில் ஸ்டெர்லைட் ஆலை இறங்கி உள்ளது. அதாவது, நாங்கள் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம் என்ற தோற்றத்தை ஏற்படுத்த, ஸ்டெர்லைட் ஆலை இந்த செயலில் இறங்கி இருக்கிறது.


   இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையின் நலத்திட்ட உதவிகளை ஏற்க மறுத்துள்ள பண்டாரம்பட்டி கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்றிரவு ஊர் பொதுவிடத்தில் கூடிய அவர்கள் விடிய விடிய தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.


அவர்கள் நம்மிடம், "எங்கள் கிராமத்தில் நடுவதற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் மரக்கன்றுகளை கொண்டு வந்து வைத்து சென்றுள்ளார்கள். அதனை அவர்களே திரும்ப எடுத்துச் செல்லட்டும். எங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து கொடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதனை நாங்கள் முற்றிலும் மறுக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையின் நடவடிக்கைக்கு பாண்டாரம்பட்டி கிராமத்தினர் நாங்கள் என்றைக்கும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்" என்றனர்.


   இதேபோல், ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகே உள்ள தெற்குவீரபாண்டியபுரம், குமரெட்டியபுரம், சில்வர்புரம் போன்ற கிராமங்களிலும் மரக்கன்றுகளை நடும் பணியில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் இறங்கி உள்ளது. அங்கும் மக்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்