கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் மூலம் காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், புவனகிரி வட்டம் பகுதியில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இதன் மூலம் இப்பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் மற்றும் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், இறவாங்குடி, பாப்பாக்குடி மற்றும் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் செங்கால், கருவாட்டு, வெண்ணங்குழி ஓடைகள் வழியாக வினாடிக்கு 20,000 கனஅடி தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. ஏரியின் பாதுகாப்பை கருதி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளியங்கால் ஓடை வழியாக வினாடிக்கு 22,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் பெய்த மழை நீர் ஓடைகள் வழியாக வருவதால் வெங்கடேசபுரம், மடப்புரம் ,வீரானந்தபுரம், கண்டமங்கலம், குருங்குடி, சித்தமல்லி, கருணாகரநல்லூர், அறந்தாங்கி, வானமாதேவி, பா.புத்தூர், அகர புத்தூர், மணவெளி ஆகிய வீராணம் ஏரியின் மேல் பகுதி கிராமங்களும், ஏரி கீழ் பகுதி கிராமங்களான திருநாரையூர், நடுத்திட்டு, வவ்வால் தோப்பு, வீரநத்தம், சிறகிழந்த நல்லூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
செங்கால் ஓடைகரை பகுதியில் சிக்கிய வானமாதேவி கிராமத்தில் வசித்து வரும் 6 பேரை காட்டுமன்னார்கோவில் தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறு கட்டி காப்பாற்றி அழைத்து வந்தனர். விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் பாதுகாப்பாக வெளியேற்றி முகாம்களில் தங்க வைத்தனர். மேலும் படகுகள் மூலம் ஆபத்தான பகுதிகளில் வசித்த மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வீராணம் ஏரி, வெள்ளியங்கால் ஓடை மதகு, ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வெள்ளாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் வெள்ளியங்கால் ஓடைக்கு அருகே காட்டுமன்னார்கோவில் நகரப் பகுதிக்கு செல்லும் சாலையில் ரம்ஜான் தைக்கால் பகுதியில் அதிகளவு வெள்ள தண்ணீர் செல்வதால் காவல்துறையினர் யாரும் சாலையை கடக்கக்கூடாது என்று ஒளிபரப்பு மூலம் பொதுமக்களை எச்சரித்தனர் செய்து வருகின்றனர். ஏரியில் இருந்து விஎன்எஸ்எஸ் மதகு வழியாக வினாடிக்கு 2,100 கனஅடி தண்ணீர் வெள்ளாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு வினாடிக்கு 74 கன தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனையறிந்த தமிழக வேளாண்மை மற்றும் உழவு நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் மகனும் திமுக மாவட்ட கழக பொருளாளருமான கதிரவன் மற்றும் திமுகவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.