இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் நேற்று (03.01.2024) தொடங்கியது. முதல் டெஸ்ட் பொட்டியில் வெற்றி பெற்று 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 55 ரன்களுக்கும், இந்தியா 153 ரன்களுக்கும் ஆட்டமிழந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 62க்கு 3 என்ற நிலையில் இருந்தது.
இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தென் ஆப்பிரிக்கா அணி தொடர்ந்தது. ஒரு பக்கம் மார்க்ரம் நிலைத்து நின்று ஆட, மறுபக்கம் தென்னாபிக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இரண்டாம் நாளில் பெடிங்காம் 11 ஜான்சன் 11 தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கங்களில் அவுட் ஆகி வெளியேறினர். மார்க்ரம் மட்டும் அபாரமாக விளையாடி சதமடித்து 106 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மிகவும் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகேஷ் குமார் இரண்டு விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் பிரசித் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இந்த முறை ஜெய்ஸ்வால் ஓரளவு அதிரடியாக ஆடி 28 ரன்கள் எடுத்தார். கில் 10 ரன்களிலும், விராட் கோலி 12 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் ரோஹித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர். 12 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் 17 ரன்களும், ஷ்ரேயாஸ் 4 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர்.
இந்திய அணியின் வெற்றிக்கான ரன்களை ஷ்ரேயாஸ் அசத்தலான பவுண்டரி மூலம் தேடித்தந்தார். இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது. ஆட்டத்தின் இரண்டாம் நாளின் பாதியிலேயே போட்டிக்கான முடிவு கிடைக்கப் பெற்றது. இந்த ஆட்டத்தில் மொத்தம் 107 ஓவர்களே வீசப்பட்டுள்ளது. 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ஓவர்களில் முடிவு கிடைத்த போட்டியாக இன்றைய போட்டி அமைந்தது. என்னதான் இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்திருந்தாலும், தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாத அணி என்னும் மோசமான வரலாற்றை தொடர்கிறது.
சேனா (SENA) நாடுகள் என்று அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி, மற்ற மூன்று நாடுகளிலும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. தென்னாபிரிக்காவில் மட்டும் கைப்பற்ற முடியாத ஒரு மோசமான வரலாறு இன்னும் தொடர்கிறது. தோனி தலைமையில் 2010 ஆம் வருடம் நடைபெற்ற சுற்றுப்பயணத்தின் போதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்று தொடரை சமன் செய்தது.
இந்நிலையில், டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்ததை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவின் பிட்சுகளின் தன்மை பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. கிரிக்கெட் விமர்சகர்களும் இந்திய ரசிகர்களும் ஒருவேளை இந்தியாவில் இந்த போட்டி நடைபெற்று இருந்தால், இந்திய பிட்சுகளின் தன்மை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கும், ஆனால் தென்னாப்பிரிக்காவிலும் இப்படி இரண்டு நாட்களில் முடிவு கிடைக்கிறது. இதற்கு மற்ற நாடுகள் என்ன சொல்லப் போகின்றன என்றும் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
-வெ.அருண்குமார்