திமுக தலைமையிலான சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் 2 வது தேசிய மாநாடு நேற்று (செப்டம்பர் 19) டெல்லியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் காணொளி வாயிலாக கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டில் நடந்த போராட்டத்தால்தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் முதல்முறையாக திருத்தப்பட்டது. தமிழ்நாட்டை பார்த்து பல்வேறு மாநிலங்கள் சமூக நீதியை வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக நீதியை வழங்கியது மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகள் கிடைக்க வழிகாட்டியது திராவிட இயக்கம் தான்.
தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களின் காரணமாகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டமே முதன்முறையாக திருத்தப்பட்டது. சமுதாயத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் எந்தச் சமூகத்தவர்க்கும் செய்யும் சலுகைகளை, அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவும் தடுக்காது'' என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 15 உட்பிரிவு 4 என்ற முதலாவது திருத்தம். இந்த சட்ட திருத்தத்துக்குக் காரணம், ஹேப்பினிங்ஸ் இன் மெட்ராஸ் (happenings in Madras) என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார் அன்றைய பிரதமர் நேரு” என பேசினார்.
இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருக்க வேண்டும். அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்கள் விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இட ஒதுக்கீடு மாநிலத்தின் உரிமை என்று அதிகாரத்தை மாற்றி வழங்கினால்தான் அந்தந்த மாநிலங்கள் தங்கள் மக்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க முடியும்” என பேசினார். இந்த மாநாட்டில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளை சேர்ந்த பல்வேறு தலைவர்களும், பல்துறை அறிஞர்களும் கலந்துகொண்டனர்.