
கரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இடையில் சில நாட்கள் தடை நீக்கப்பட்டு பிறகு மீண்டும் பேருந்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.
செப்டம்பர் 1ம் தேதிக்கு பிறகு, மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கிய பணி மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வர பொதுமக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 7ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது 166 நாட்களுக்கு பிறகு மீண்டும் பேருந்து சேவை முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.