சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும், முக்கியத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி தலைமை தாங்கி பேசுகையில், இட ஒதுக்கீடு துல்லியமாக பல சமூகத்தினருக்கு கிடைக்கவில்லை என்றும், நாட்டில் இதர பிற்பட்ட பிரிவினர் தோராயமாக 60 சதவீதம் உள்ளனர், அவர்களுக்கு 27 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. எனவேதான் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தினால், அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு கிடைக்கும்.
அதனால்தான் காங்கிரஸ் கட்சி சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்க வலியுறுத்தி வருகிறது. இதற்கு பாஜகவினர் எதிர்க்கின்றனர். சாதி வேறுபாடு வேண்டாம் என்பது தான் காங்கிரசின் நிலைப்பாடு. சாதிய ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை சாதிய கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்குரிய ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்” என பேசினார்.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “காங்கிரஸ் கட்சி மகத்தான இயக்கத்தை நடத்துகிறது. கடந்த 9 ஆண்டுகளாக ஒன்றிய அரசு பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் தற்போது 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை கையிலெடுப்பது 2024 தேர்தலில் வாக்குக்காக தான் செய்துள்ளனர். இதிலிருந்தே பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி, பிற்போக்கு அரசு என்பதற்கான எடுத்துக்காட்டு இதுதான். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளனர். இதனுடன் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தினால் எஸ்.சி, எஸ்டி மற்றும் பிற்பட்டவர்களுக்கு சதவீத அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதால், பாஜக மறுத்து வருகிறது. சாதிய ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை சாதிய கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்” என்று பேசினார்.
திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசுகையில், “சாதி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நாம் கூறி வருகிறோம் ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தக் கூடாது என கூறுகின்றனர். அப்படி நடத்தினால் துல்லியமான இட ஒதுக்கீடு கிடைத்துவிடும் என்பதால் அவர்கள் எதிர்த்து வருகின்றனர். கொள்கை கூட்டணியான இந்தியா, கூட்டணி புதிய இந்தியாவை உருவாக்கும். பாஜக இந்தியா என்ற பேச்சை கேட்டாலே பயப்படுகிறது. இங்கு மனிதநேயத்திற்கும் மனு தர்மத்திற்கும் போட்டியாக உள்ளது. பாஜக ஒரே நாடு ஒரே தேர்தல் என கூறுகிறது. ஆனால், ஒரே ஜாதி என கூற மறுக்கிறது. சமூகநீதி சமத்துவத்தை பரவலாக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு மிக முக்கியமான ஒன்றாகும்” என்றார்.
இந்நிகழச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ, காங் கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாநில செயலாளர் சித்தார்த்தன், நகர தலைவர் மக்கீன், பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலத் துணைத்தலைவர் மூசா, நகர செயலாளர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சின் மாவட்டச் செயலாளர் அரங்க தமிழ் ஒளி, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சார்ந்தவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.