உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் தமிழக அரசும் பங்கு கொள்ளும் வகையில், ஆண்டுதோறும் பொங்கல் திருநாளின் போது தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்குவது வழக்கம்.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்கள் என 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசாக தமிழக அரசால் கடந்த ஆண்டு (2023) வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டும் (2024) பொங்கல் பரிசாக தமிழக அரசு சார்பில் ரூ.1000 வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில், ரூ.1000 பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி மற்றும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்குவது குறித்து, ஜனவரி 3 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.