ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மாவட்ட சிறை செயல்பட்டு வருகிறது. இந்த சிறையில் ஈரோடு மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி கோவை, திருப்பூர், மதுரை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கொலை, கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட 130 -க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் வழிப்பறி வழக்கில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட பாபுராஜ் (30) என்பவரும் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை சிறைத்துறை உதவி ஜெயிலர் சிவன் தலைமையில் சிறைத்துறை அதிகாரிகள் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறை அறைக்குள் சோதனை செய்தனர். அப்போது விசாரணை கைதியான பாபுராஜிடம் இருந்து செல்போன் பேட்டரி மற்றும் கஞ்சா இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சோதனை செய்தபோது மற்றொரு கைதி அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்தாண்டு இதே சிறையில் இருந்த கோவையைச் சேர்ந்த விசாரணை கைதிகளிடமிருந்து இரண்டு செல்போன்கள், பேட்டரி, சிம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. கைதிகளுக்கு யாரேனும் சிறைத்துறை அதிகாரிகள் உதவி செய்தார்களா என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் சிறைத்துறை உயர் அதிகாரிகள் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறைக்கு சென்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணையில் தப்பு செய்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என தெரிய வருகிறது. இந்நிலையில் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் கடந்த 3 ஆண்டுகளாகவே ஜெயிலர் பணியிடம் காலியாக உள்ளது. தற்போது உதவி ஜெயிலர் கூடுதலாக அந்தப் பணியை கவனித்து வருகிறார். எனவே உடனடியாக ஜெயிலர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அடுத்தடுத்து கோபி மாவட்ட சிறை சர்ச்சையில் சிக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.