தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்திருந்தது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், நீட் பாதிப்பை ஆராய அரசு சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் குழுவை எதிர்த்து பாஜகவின் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின், " நீட் விலக்கு பெறுவதில் திமுக அரசு சரியான திசையில் செல்கிறது என்பதை இன்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. நாடகமாடியதைத் தவிர நீட் தேர்வில் சிறு துரும்பையும் கிள்ளிப் போடாத பழனிசாமிக்கும், தமிழ்நாட்டுக்குப் பச்சைத் துரோகம் இழைக்கும் பாஜகவுக்கும் கிடைத்த நெத்தியடி இது" என்று தெரிவித்துள்ளார்.