தமிழக முதல்வராகப் பதவியேற்ற சில நாளில், 'எனக்கு பொன்னாடைகள் வேண்டாம்; புத்தகம் போதும்' என்று தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கு அன்புக் கட்டளையிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அன்றிலிருந்து புத்தகப் பரிமாற்றம் புத்துயிர் பெற்றது. திருமண விழா, பிறந்த நாள் விழா, சிறப்பு நிகழ்ச்சிகள் என எங்கு காணினும் திமுகவினர் புத்தகத்தை அன்பளிப்பாக அளித்து வருகின்றனர். ஸ்டாலினின் இந்த அறிவிப்பை ஊடகங்கள் உச்சிமுகர்ந்து பாராட்டின. இது வெகுஜன மக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் அவருக்குப் பலரும் புத்தகத்தைப் பரிசளித்து வருகின்றனர். அவரும் பிறருக்கு புத்தகத்தையே பரிசாய் கொடுத்து வருகிறார். சமீபத்தில், டெல்லி சென்றிருந்த ஸ்டாலின், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கொடுத்த 'Journey of a Civilization: Indus to Vaigai' என்ற புத்தகம் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அந்த அதிர்வின் வீச்சு திருவாரூர் மாவட்டத்தில், 11-ம் வகுப்பு பயிலும் சுபஸ்ரீ என்ற மாணவிக்கும் நிதீஷ் என்ற 6-ம் வகுப்பு மாணவனுக்கும் வந்து சேர்ந்துள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக இன்று (06.07.2021) மாலை திருவாரூர் வந்தடைந்தார். இரவு, காட்டூரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் தாயாரும், தனது பாட்டியுமான அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர், சன்னதி தெருவில் உள்ள உறவினர் இல்லத்துக்குச் சென்று ஓய்வெடுக்கப் புறப்பட்டார். போகும் வழியில், பவித்திரமாணிக்கம் என்ற இடத்தில் இரண்டு மாணவர்கள் முதல்வர் வாகனத்தைப் பார்த்து, புத்தகத்துடன் கைகாட்டினர். இதைக் கண்ட மு.க.ஸ்டாலின், வாகனத்தை நிறுத்தி புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு மாணவர்களை வாழ்த்தினார். இதனால் மகிழ்ச்சியடைந்த மாணவர்களைப் பின்தொடர்ந்து சென்று உடனே பேசினோம்.
அப்போது பேசிய மாணவி சுபஸ்ரீ, "நான் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் (Oyster) 11-ம் வகுப்பு படிக்கிறேன். இது என் தம்பி 6-ஆம் வகுப்பு படிக்கிறான். எங்கள் அப்பா ஆட்டோ ஓட்டுநர். நாங்கள் முதல்வருக்கு, கலைஞரின் 'திருக்குறள் உரை' புத்தகத்தை பரிசளிக்க விரும்பினோம். ஆனால் எங்களை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இருப்பினும் சாலையோரம் நீண்ட நேரம் காத்திருந்தோம். எங்களைப் பார்த்ததும் முதல்வர் வாகனத்தை நிறுத்தி புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். எங்களுக்கு வாழ்த்து சொன்னார். இது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது" என்றார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.