மத்திய அரசு கொண்டு வரும் நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த 31ம் தேதி மதுரையிலிருந்து நடைபயணத்தை தொடங்கி பத்தாவது நாளாக கம்பம் வந்தவர் நடைபயணத்தின் இறுதியாக இன்று மாலை பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு நியூட்ரினோக்கான எதிர்ப்பு பிரச்சார நடைபயணத்தை நிறைவு செய்கிறார்.
இந்தநிலையில் கம்பத்தில் ஒய்வு எடுத்து வரும் வைகோ பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது....
நியூட்ரினோ திட்டம் அமைய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியை துணை முதல்வரான ஒபிஎஸ் கொடுத்து விடாதீர்கள். அது மிகப்பெரிய தவறு. மத்திய அரசு என்ன உத்தரவு போட்டு மிரட்டினாலும், வற்புறுத்தினாலும் நீங்கள் அனுமதி கொடுத்து விடாதீர்கள். நீங்களும் அழிந்து போய் விடுவீர்கள். அப்படி ஒரு வேலை அனுமதி கொடுத்தீர்கள் என்றால் நான் மதுரை ஐகோர்ட்டுக்கு போய் முறையீடு செய்வேன். அதில் நமக்கு சாதகமாகன தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.
அப்படி கிடைத்தாலும், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு போகும். ஆனால் அங்கு உள்ள தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் மத்திய அரசான மோடிக்கு சாதகமாக தான் தீர்ப்பு வருமே தவிர நமக்கு சாதகமாக தீர்ப்பு வராது. அந்த அளவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தீபக் மிஸ்ரா செயல்பட்டு வருகிறார்.
அதுபோல், காவேரி தீர்ப்பில் தந்திரமாக, கூர்மையாக தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது உச்சநீதிமன்றம். மத்திய அரசு ஆறு வாரம் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்று கோபமாக திட்டுவது போல் திட்டி அரசியல் வாதிகளையே மிஞ்சி விட்டார் தலைமை நீதிபதியான தீபக்மிஸ்ரா. மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் சாதகமாக செயல்பட்டுள்ளது.
காவேரி இறுதி தீர்ப்பானது நல்ல தீர்ப்பு நமக்கு பத்தாயிரம் ஆண்டு உரிமையை பாதுகாக்கப்பட்டது. ஆனால் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் என்ற ஒரு சொல்கூட எங்கும் இல்லை ஸ்கீம் என்ற வார்த்தை மட்டுமே இருந்தது இது அக்கிரமம், அயோக்கிய தனம். இனி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது.
இதனால் கர்நாடகா புதிதாக இரண்டு அணைகளை கட்டும். அதை மத்திய அரசு கண்டு கொள்ளாது. இதனால் காவேரியில் ஒரு சொட்டு தண்ணீர்க்கூட வராது. 25 லட்சம் விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறும். மத்திய அரசின் கேஸ் எடுக்கும் திட்டங்கள் மட்டுமே செயல்படும். அதன்மூலம் அணில் அம்பாணி போன்ற பெரிய நிறுவனங்கள் மற்றும் பிஜேபி அரசும் தான் பயன்படுவார்கள். எனவே தமிழக மக்களே, தமிழக அரசியல்வாதிகளே இனியும் சுப்ரிம் கோர்ட்டில் நியாயம் கிடைக்கும் என நம்ப வேண்டாம் என்று கூறினார்.