ஆண்டோ லெனின் என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்தவர். இவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில்,
‘நீரோடி, மார்த்தாண்டம் துறை, வள்ளவிலை, ரவிபுத்தன்துறை, சின்னத்துறை போன்றவை, கன்னியாகுமரி மாவட்டம்- கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட மீனவ கிராமங்கள் ஆகும். இந்தக் கடலோர கிராமங்களில் சுமார் 48 ஆயிரம் மீனவ குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு ஆழ்கடல் விசைப்படகுகள் 830, நாட்டுப்படகுகள் 1500, கட்டுமரங்கள் 500 உள்ளன. கடலலைகள் மீனவ குடியிருப்புகளுக்குள் புகாதவாறு கடற்கரையோரம் அலைத் தடுப்புச்சுவர் கட்டப்பட்டிருந்தது. அது தற்போது முற்றிலும் சேதமடைந்துள்ளது. அதனால், இந்தப் பகுதியில் வசிக்கின்ற மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். வீடுகளிலும் அரிப்பு ஏற்படுகிறது. பாலங்கள் வேறு சேதமடைந்துள்ளன. எனவே, புதிதாக மேற்கண்ட கிராமங்களில் அலைத் தடுப்புச்சுவர் கட்ட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.’என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கை குறித்து குமரி மாவட்ட ஆட்சியர், மதுரை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர், நாகர்கோவில் நிர்வாகப் பொறியாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டதோடு, விசாரணையை 2 வாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.