Published on 14/08/2018 | Edited on 14/08/2018
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஈரோடு வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான ஸ்ரீபிரியா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வகுத்த வழியில்தான் அனைவரும் பாடுபடுவது. புதன்கிழமை சுதந்திர தின விழாவையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் அந்தந்த பகுதி கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
அப்போது பேசிய அவர்,
சினிமா துறையினருக்கு எதற்கு அரசியல் என்று கேட்கிறார்கள். சினிமாக்காரர்கள் மக்களுக்கு சேவை செய்யக்கூடாதா? மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்களா?. இந்தக் கூட்டத்தில் பெண்கள் அதிக அளவில் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்களுக்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் யாரும் ஏமாற்றம் அடைய வேண்டியதில்லை.
பல்வேறு கட்சிகளில் ஒருசிலர் வீரவசனம் பேசுவார்கள். செயல்பாடுகள் இருக்காது. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சியில் செயல்பாட்டுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விரைவில் தேர்தல் வரப்போகிறது. மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தினை மக்கள் நீதி மய்யம் கொண்டு வரும். இவ்வாறு கூறினார்.